நகர மண்டபத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்களுள் ஒன்று 1945 செப்டம்பர் 12ல் ஜப்பானியப் படைகள் அதிகாரபூர்வமாக சரணடைந்தது. சிங்கப்பூர் மீதான ஜப்பானிய ஆதிக்கத்தின் முடிவை அந்த நிகழ்வு குறித்தது. நட்புப்படை வீரர்கள் காவலுடன் ஜப்பானியக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் இடாகாகி சீஷிரோ சரணாகதி ஆவணத்தில் கையொப்பமிட நகர மண்டபத்தை நோக்கி நடந்து வந்தார்.
காட்சியை நேரில் கண்டவர் கூறியது:
"அங்கே படிகளில் சடங்கு அணிவகுப்பு வீரர்கள் சூழ்ந்திருந்தனர். பிறகு ஜப்பானியர்கள் வந்தார்கள். ஃபீல்ட் மார்ஷல் தரௌச்சி என்று நினைக்கிறேன். அவர் தனது வாளை சரணாகதியின் அடையாளமாகக் கொடுத்தார். எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்திருந்த நாள் அது... (ஜப்பானியர்கள் வந்த போது அங்கிருந்த சூழல்) ஒரே நிசப்தம். “இது நிஜம்தானா?” என்ற எண்ணம்தான் எல்லோர் மனதிலும் நிறைந்திருந்தது.”