உங்களுக்கு முன்னுள்ள இந்த ஓவியங்கள் 1960-ல் மலேயாவின் கிழக்கு கடற்கரைப் பயணத்தின் போது வரையப்பட்டவை. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக, சென் தனது காரை சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்கும், பின்னர் மலேயக் கிழக்கு கடற்கரையை நோக்கியும் ஓட்டிச் சென்று மனதை ஈர்க்கும் காட்சிகளைத் தேடினார்.
சென் வெளிப்புற உருவப்பட முறையை கிழக்குக் கடற்கரை விற்பனையாளர் படைப்பின் மூலம் சோதித்துப்பார்த்தார். விற்பனையாளரின் பிரகாசமான சிவப்புத் தலைக்கவசம் கண்ணை உடனடியாகக் கவரும். அவரது காலநிலையால் பாதிப்படைந்த முகம் கரையில் கழித்த அவரது வாழ்க்கையைப் பற்றி பேசும். கிழக்குக் கடற்கரை விற்பனையாளர் ‘தாய் மற்றும் குழந்தை இணை’ என்ற சென்னுக்கு விருப்பமான கருப்பொருளை வழங்குகிறது, அடுத்துள்ள காட்சிக்கூடத்திலுள்ள மற்ற எடுத்துக்காட்டுகளில் அதனைக் காணலாம். வயதின் காரணமாக நன்கு சுருங்கிய தாயின் முகம் அவருடைய குழந்தைகளின் இளமைத் துடிப்புக்கு முற்றிலும் மாறுபட்டது.
சென்னின் வண்ணத்தைப் பயன்படுத்தும் விதம் ஓய்வுக் கொட்டகை (திரங்காணு) படைப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பிரகாசமான சிவப்பு மற்றும் பச்சை நிற உடையணிந்து, கடற்கரைப் பின்னணியின் மஞ்சள் மற்றும் பழுப்பு நிற மணல்வெளிக்கு எதிராக எடுப்பாகத் தெரிகிற மையத்தில் உள்ள உருவத்தின் மீது உங்கள் கவனம் உடனடியாக ஈர்க்கப்படுகிறது.
இடதுபுறத்தில் உள்ள, திரங்காணு சந்தைக் காட்சி, ஒரு மும்முரமான சந்தைக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது, வாங்குபவர்களும் ஒரே மாதிரியாக உள்ள விற்பனையாளர்களும் பழம் மற்றும் பொருட்கூடைகளைச் சுற்றி நிற்கிறார்கள். துடிப்பான வண்ணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சலசலப்பு நிறைந்த சந்தைச் செயல்பாடுகளுக்கு சென் உயிரூட்டுகிறார். அவர் பலவிதமான பிரகாசமான தொனிகளிலும் திடமான வடிவங்களிலும் கூட்டத்தை வரைந்திருக்கிறார். ஓவியத்தை உற்று நோக்கினால், அவர்களின் ஆடைகளின் நிறத்தின் அடிப்படையில் தனிப்பட்ட நபர்களை உங்களால் அடையாளம் காண முடிகிறதா? ஒவ்வொரு தனிமனிதனும் கூட்டத்திலிருந்து தனித்து நிற்கிறார், ஆனால் எல்லோரும் ஒன்றிணைந்து மனம் கவரும் வகையில் இணக்கமாகத் தெரிகிறார்கள்.
இதில், சென் முதன்முறையாக ஒரு நிலப்பரப்பில் பல உருவங்களைச் சித்தரித்துப் பரிசோதனை செய்தார். இந்தக் காட்சிக்கூடத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் மலாய்த் திருமணத்தின் ஓவியத்தில் அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதே அணுகுமுறையைத் திரும்பவும் செய்திருக்கிறார்.
சென்னின் பயணம் அவரது கலைப் பார்வை மற்றும் செயல்முறையின் வளர்ச்சியைத் தொடர்வதற்கான ஒரு வழியாகும். இப்பகுதியைச் சுற்றியுள்ள அவரது பயணங்கள் பல ஆண்டுகளாக அவரது படைப்புகளின் பரிசோதனை மற்றும் பரிணாமத்திற்கு வழிவகுத்தன.