Stop 15
5315

நிலைப்பொருள் ஓவியம்

சூசான் விக்டர்
Artwork
City Hall Wing, Level 2, DBS Singapore Galleries
Use headphones for a better listening experience and to be considerate to others.
5315.நிலைப்பொருள் ஓவியம்(0:00)
0:00
0:00

கரும் ஊதா நிறம் மங்கி பழுப்பு நிறமாகிறது. தோல் சுருங்கி, பழம் மென்மையடைகிறது. அதன் வளைவு தொய்வடைகிறது; ஆனால் அதன் வடிவம் ஒரு குறியீடாகவே நீடிக்கிறது. இது ஒரு காட்சி சார்ந்த சிலேடை போல, வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் இது பழத்தைப் பற்றியது அன்று; மாறாக இது அதிகாரத்தைப் பற்றியது. ஆண் ஆதிக்கம் நிறைந்த சூழல்களில் பெரும்பாலும் நிலவும் வசதியின்மை மற்றும் சில சமயங்களில் அச்சுறுத்தல் பற்றியது. 'நிலைப்பொருள் ஓவியம்' படைப்பில், சுசான் விக்டர் இந்தச் சாதாரணப் பழத்தைப் பயன்படுத்தி ஒரு கேள்வியைக் கேட்கிறார், அது: சமூக வெளியில் ஆணாதிக்கம் எவ்வாறு தனது வடிவத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது? அவ்வாறு செய்யும்போது என்ன நடக்கிறது?

சுவரில் ஆணியால் அடிக்கப்பட்டு, அழுக விடப்பட்ட அந்தப் பழம் சக்தியற்றதாகத் தெரிகிறது. ஈர்ப்பு விசையும் காலமும் விக்டரின் அமைதியான கூட்டாளிகளாகச் செயல்படுகின்றன. ஒவ்வொரு முறையும் ஒரு கத்தரிக்காய் அழுகிச் சிதையும்போது, அது மாற்றப்படுகிறது, சில சமயங்களில் அதன் நிலை மாற்றியமைக்கப்படுகிறது. அழிவு, புதுப்பித்தல். இந்தச் சுழற்சி தொடர்கிறது. சுவர்கள் நெடுகிலும் நிகழும் இந்த மெதுவான சிதைவு ஒரு சாதாரண நிகழ்வு அன்று. இது அதிகாரக் கட்டமைப்புகள் பற்றிய ஒரு பிரகடனம்: சர்வாதிகார ஆணாதிக்கத்தின் சின்னம் கண் முன்னே சிதைந்து போவதைக் காட்டுகிறது. திடீர் நாடகம் எதுவும் இல்லை. மெதுவான உண்மைகள் மட்டுமே; காலத்தின் தாக்கம், தேய்மானம், மெல்லமெல்லக் குறைந்துபோகும் அதிகாரம் ஆகியவற்றின் விளைவுகள்.

தனது இயக்கவியல் நிறுவற்கலைப் படைப்புகளுக்கு முன்பே, விக்டர் இயக்கம் மற்றும் உருமாற்றம் குறித்து ஆராய்ந்து வந்தார். ஆனால் இங்கே, அச்சக்தி இயந்திரத்தனமானது அன்று; அது இயற்கையானது. அழுகலை ஒரு முறையாகப் பயன்படுத்துகிறார்.

'நிலைப்பொருள் ஓவியம்' என்ற படைப்பு முதன்முதலில் 1992-ல், '5ஆம் கடவுவழி' நடத்திய 'உடல் களங்கள்' என்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. '5ஆம் கடவுவழி' என்பது சிங்கப்பூரின் தொடக்கக்கால நிறுவனங்களின் நிதியுதவி பெற்ற, கலைஞர்களால் நடத்தப்பட்ட ஒரு கலைக்கூடம் ஆகும். விக்டர் அதன் கருத்தாக்க உருவாக்குநராகவும் கலை இயக்குநராகவும் இருந்தார். சிங்கப்பூரில் அக்காலத்தில் உருவாக்கப்பட்ட தொடக்கக்கால, குறிப்பிட்ட இடத்திற்கான கலை நிறுவல்களில் ஒன்றாகத் திகழ்ந்த இந்தப் படைப்பு, பாலினம் நமது சமூக வெளிகளை எவ்வாறு வடிவமைக்கிறது என்பது குறித்த அறிஞர் லிண்டா பீக்கின் (Linda Peake) 1993-ஆம் ஆண்டின் முன்னோடிக் கட்டுரைக்கு முன்னதாகவே வெளிவந்தது.

Transcript