மோரோ நடனம்
ஒகாம்போவின் Moro Dance (மோரோ நடனம்), சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தின், நிதானக் கலை வழிகாட்டிக்கு வரவேற்கிறோம்.
நிதானமான, சிந்தனைமிகு கொள்கைகளால் உந்தப்பட்ட, நிதானக் கலை வழிகாட்டியின் ஒவ்வோர் அத்தியாயமும், கலைக்கூடத்தின் ஒவ்வொரு கலைப் படைப்பினுள்ளும் இட்டுச்சென்று, ஆழச் சிந்திக்க வைக்கும். அவசரமின்றி, நிதானமாக ஒவ்வொரு கலைப் படைப்பையும் கூர்ந்து ஆராய்வதும், விழிப்புடன் கருத்தூன்றிய முறையில் கலைப் படைப்புகளைத் துய்ப்பதுமே இந்த அனுபவம்.
இந்த உணர்வுமிகு, சிந்திக்கவைக்கும் முறையினுள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் தருணத்தில், எண்ணங்கள், உணர்வுகள், உடலுணர்ச்சி போன்றவை, சில நேரங்களில் உங்களைத் திணற வைக்கலாம். இன்று உங்களுக்கு அவ்வாறாக இருந்தால், ஒலியுணர்வு அனுபவத்தைத் தவிர்த்துவிட்டு, Calm Room எனும் ஓய்வு அறைக்கு நீங்கள் செல்லலாம்.
நிதானக் கலை வழிகாட்டி அனுபவ நிறைவில், இக்கலையுடன் ஆழ்ந்த உணர்வுபூர்வத் தொடர்பு இருப்பதுடன், இந்தத் தருணத்தை அனுபவித்து மகிழ்வீர்கள் என நம்புகிறோம்.
உங்களை உணரச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சிறிது ஓய்வெடுத்து, ஓவியக் கலை மூலம், உங்கள் மனம். உடல், ஆன்மா ஆகியவற்றுக்கு இதமளிக்க நேரம் ஒதுக்கியதற்கு உங்களுக்கு நீங்களே நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள்.
எளிய மூச்சுப் பயிற்சியைத் தொடங்குவோம். உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். எதிலும் மாற்றம் தேவையில்லை. இயல்பாகவே சுவாசியுங்கள்.
கண்களை மூடி, அவற்றை இளைப்பாறச் செய்யலாம் அல்லது மென்மையாக நோக்கலாம்.. மூச்சை உள்ளிழுத்து, வெளியே விடும்போது, உங்கள் சுவாச முறையைக் கவனியுங்கள். சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சுவாசம் நீண்டதாக, சரளமானதாக உள்ளதா? அல்லது குறுகியதாக, விரைவானதாக உள்ளதா?
விரும்பினால், உங்கள் வயிற்றில் கை வைத்துக் கொள்ளுங்கள். கை வைத்ததால் ஏற்படும் வெப்பததை உணருங்கள். ஒவ்வொரு முறையும் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும்போது, வயிற்றுப் பகுதி, சுருங்குவதையும் விரிவதையும் உணருங்கள். நீங்கள் சுவாசிக்கும்போது, உடலை இளைப்பாற விடுங்கள். உங்கள் சுவாசம், உங்களைத் தாங்கும் ஆதாரமாகட்டும்.
மூச்சை உள்ளிழுங்கள். வெளியே விடுங்கள். உள்ளிழுங்கள். வெளியே விடுங்கள்.
கண்களை மூடியிருந்தால் அவற்றை மெல்லத் திறக்கவும்
நாம் ஒன்று சேர்ந்து இந்தக் கலைப் படைப்பை ஆராயும்போதுஉங்களுக்குமிகவும் செளகரியமான வகையில் சுற்றிப் பாருங்கள். கலைப்படைப்பின் முன்னால், கலைக்கூடத்தின் தரையில் அமர்ந்து கூட நீங்கள் அந்தப் படைப்பைக் கண்டு இரசிக்கலாம். நீங்கள் அதை ரசிக்க சிறிது அவகாசமளிப்போம். முன்னால் இருக்கும் படைப்புப் பற்றிச் சிந்தியுங்கள். என்ன உணர்வு ஏற்படுகிறது?
உங்கள் கண்களைக் கவர்வது எது? எதைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறீர்கள்?
இப்போது கலைப்படைப்பைக் காண்போம். முதலில் படைப்பின் மையப் பகுதி - அதில் நடனமணி. அவளின் நளினமான, துல்லியமான கைகால் நிலைகளைக் கவனியுங்கள் அவளுடைய கைகளின் தெளிவான அபிநயத் தோற்றநிலை, வில்வளைவு போன்ற அவள் பாதங்கள்.
எவ்வளவு இலகுவாகவும் நளினமாகவும் உடலை அசைக்கிறாள் என்பதைக் கவனியுங்கள். அசைவுகள் திடமாகவும் நீர்மமாகவும். அவள் அபிநயங்கள், உடல் மீதிருக்கும் அவளின் ஆளுமையைக் காட்டுகின்றன.
நீங்களும் இதைச் செய்து பார்க்க விரும்பினால்இந்த அபிநயத்தை முயன்று பாருங்கள். அவளைப் போலே, கைகளை வைத்துக்கொள்ளுங்கள் விரல்களின் மீது கவனம் செலுத்துங்கள் அதோடு உயர்ந்திருக்கும் தோள்களையும்
அசையும்போது, கைகளில் ஒலியெழுப்பும் தங்க வளையல்களின் எடையைக் கற்பனை செய்யுங்கள்.
அவள் பாவனை அமைப்பை உன்னிப்பாகக் கவனியுங்கள். இறுக்கமான, உறுதியான தசைகளுடன்கால்கள் எவ்வளவு நளினமாய் வளைகின்றன. அவற்றின் வலிமையைக் கற்பனை செய்க. நீங்கள் அதைச் செய்துபார்க்க விரும்பலாம். முழங்கால் வளைவையும், பாதங்களின் மேல் வளைவையும் அவளைப் போலச் செய்து பார்க்கவும். செய்தால், எவ்வாறு இருக்கின்றது?
அடுத்து, கவனம் அவள் முகத்தில். அவள் கண்கள் மூடியிருக்கின்றன. ஆழ்ந்த அமைதியிலும் ஆனந்த நிலையிலும், சுற்றி நடப்பனவற்றை அறியாதவளாய் இருக்கிறாள் - அவளின் உடலசைவைத் தவிர. இந்தக் கணத்தில் அவள் என்ன நினைக்கிறாள் அல்லது எதை உணர்கிறாள்? அவளை நோக்கும்போது, உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் கவனியுங்கள்.
வண்ணம் தீட்டும் உலகினுள் காலெடுத்து வைத்தால், உங்களுக்கு எது கேட்கும்? . ஒரு கணம் கற்பனை செய்யுங்கள். என்ன வகையான இசை ஒலிக்கும்? .
அது வேகமான இசையாக இருக்குமா அல்லது மெதுவானதா? பின்னணியில், அது மென்மையாக ஒலிக்குமா, அல்லது உங்கள் நரம்புகள் அதிரும் வகையில் இரைச்சலாக இருக்குமா? நிறங்களுக்கும் இசைக் கூறுகளுக்கும் ஏற்ப நீங்கள் எவ்வாறு நகர்வீர்கள்?
பின்னணியிலிருக்கும் பகட்டான மலர்வடிவங்களைக் கூர்ந்து கவனிக்கவும் – முறுக்கிய, வளைந்த பூவணி வேலைப்பாடு, சவுக்கடியை ஞாபகப்படுத்தும். அவை எதைப் பிரதிபலிக்கின்றன? அவள் நடனமாடும் மேடையின் பின்னணித் திரையையா அல்லது அவளின் சுற்றுப்புற இயற்கை அது சித்திரிக்கிறதா? அவை இசையின் ஒலியா? அல்லது அவள் இரசிகர்கள் பாடும் குரலா?
ஒருவேளை, அவை நடனமணியின் உள்ளத்தின் உலகாய்
இருக்கலாம். நடனமணி ஒரு பாய்வு நிலையை அடைந்திருக்கிறாள். அவள் உடல் கட்டுப்பாடு அவளிடம். உடல், உள்ளம் இரண்டுமே நல்லிணக்க நிலையில். அவளைச் சுற்றிச் சுழலும் வடிவங்கள் கொண்டவள் அவள்.
நடனமணி அடைந்த மனம், உடல், ஆன்மா ஆகியவற்றின் ஒருமைப்பாட்டால் தூண்டப்பட்டு ஒரு குறுகிய தியானப் பயிற்சியை மேற்கொள்வோம். தியானம் முக்கிய குணப்படுத்தும் பயிற்சியாக அமையும். எது நடக்கின்றதோ, அது நடப்பதைப் போன்றே சுற்றிலும் நடப்பவற்றை அணுகுவதே தியானப் பயிற்சி.
கண்களை மெல்ல மூடுங்கள் அல்லது மென்மையாகப் பாருங்கள். உங்கள் உணர்வை மூச்சு விடுதலுக்குக் கொண்டு வாருங்கள். நெடிய மூச்சை இழுத்து, மெல்ல மூச்சை வெளிவிடுங்கள். மூச்சை வெளிவிடும் போது, உடல் இயல்பு நிலையில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
நடனமணி தம் கைகால்களைத் துல்லியமாகவும் கவனமாகவும் அசைப்பதை உணர்வது போல், உங்கள் உடலின் எல்லாப் பகுதிகளிலும் ஏற்படும் உணர்வுகளை உணருங்கள். சற்று நேரம், உங்கள் உடலின் ஒவ்வோர் உறுப்பின் மீதும் கவனம் செலுத்தவும்.
உங்கள் தோள்களில் என்ன உணர்கிறீர்கள், உங்கள் மேற்கையில், உங்கள் முழங்கைகளில், உங்கள் கைகளில், விரல்களில்?
மூச்சை இழுங்கள். உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதிக்குக் கொண்டு வாருங்கள், இடுப்பு, தொடைகள், முழங்கால்கள், பின்னங்கால் தசைப் பகுதி, கணுக்கால், பாதங்கள், உங்கள் விரல்கள். அந்த நேரத்தில் ஏற்படும் எந்த உணர்வையும் ஏற்கவும்.
இப்போது, ஒவ்வொரு மூச்சுடனும், உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இதத்தையும் கனிவையும் அனுப்புங்கள். உங்கள் உயிர்வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பதற்காக ஒவ்வொரு கைக்கும் காலுக்கும் உறுப்புக்கும், உடல் பகுதிக்கும் நன்றி தெரிவியுங்கள். அது, உங்கள் பாதங்களில் ஊடுருவி, பின்னங்கால் தசைப் பகுதி, தொடைகள், வயிறு, நெஞ்சுப் பகுதி, தோள்கள், கழுத்து, ஆகியவற்றுக்குப் பரவுவதை உணருங்கள். அந்த இதம் உங்கள் முகம் முழுதும் பரவி, கடைசியாக உங்கள் மனதில் பதியட்டும்.
இப்போது, ஓவியத்தின் வண்ணச் சுழல்களிலும், தாள அலைகளிலும் மூழ்கிவிட்டதாகக் கற்பனை செய்யுங்கள். வண்ணங்களும் இசையும் உடலில் ஊடுருவ அனுமதியுங்கள். சருமத்திலும், தசையிலும் என்ன உணர்வு ஏற்படுகின்றது? உங்களை நகரச் செய்கிறதா? இந்த அரிய பின்னணியில், உங்கள் உடல் உருகி, சுற்றி இருப்பவற்றுடன், கரைந்து பிணைவதாகக் கற்பனை செய்யுங்கள்.
உங்கள் கவனத்தை உங்கள் சுவாசத்திற்கும் முழு உடலுக்கும் கொண்டு வாருங்கள். உங்கள் சுவாசம், உங்களுக்கு ஆதாரம் தந்து உங்களுக்குள் பதிந்து விட அனுமதியுங்கள்.
மூச்சை உள்ளிழுங்கள். வெளியே விடுங்கள். மூச்சை உள்ளிழுங்கள். விடுங்கள்.
இந்த தியானப் பயிற்சியின் நிறைவில், பின்வருவன பற்றி சிந்திக்கவும்: கடைசியாக எப்போது நடனம் ஆடினீர்கள் அல்லது நீங்கள் விரும்பியதைச் செய்தீர்கள்? இவ்வாறாக விரும்பிச் செய்த அனுபவத்தை, இன்னும் அதிகமாக எப்படி உங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவீர்கள்?
உங்கள் கண்கள் மூடியிருந்தால், மெல்லத் திறந்து, நீங்கள் இருக்கும் பின்னணியுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள். ஒரு விநாடிக்கு, உங்கள் சுவாசத்திற்கும் தற்போதைய கணத்திற்கும் இருக்கும் பிணைப்பை உணர முற்படுங்கள்.
உங்கள் முன்னிருக்கும் கலைப்படைப்பை உற்று நோக்குங்கள்.
ஃபிலிப்பீன்ஸ் நாட்டு ஓவியரான காலோ ஒகாம்போ இந்தப் படைப்பை, இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, தம் நாடு சுதந்திரம் வாங்கிய பின்னர், 1946ல் ஓவியமாகத் தீட்டினார். ஸ்பெயின், அமெரிக்கப் படைகள் ஆகியவற்றின் கீழ் காலனித்துவ ஆட்சியையும் ஜப்பானிய ஆக்கிரமிப்பையும்அனுபவித்த நாடுதான் ஃபிலிப்பீன்ஸ். இந்த நிகழ்வுகளுக்குப் பின் தங்களுடையது எனச் சொல்லிக் கொள்ளக்கூடிய தேசிய, கலாசார அடையாளத்தை பிலிப்பீன்ஸ் கலைஞர்கள் தேடினர். அவர்களுள் ஒருவர்தான் ஒகாம்போ. தம் சமகாலத்வருடனும், உடன் பணியாற்றியவருடனும் ஃபிலிப்பீனோ பார்வையில், புதிய பாணியில் நவீன வாழ்க்கை முறையைப் படைக்க அவர் ஆவல் கொண்டார்.
மோரோ நடனம் என்பதிலிருக்கும் மோரோ என்பது, ஃபிலிப்பீன்ஸின் தெற்கே இருந்த இஸ்லாமிய சமூகத்தினரைக் குறிப்பது. வண்ண ஓவியத்தின் நடுவில் உள்ள நடனமாடும் பெண்ணின் உருவம், ஐரோப்பிய நடன வடிவத்தை அறவே சார்ந்திராத நடனத்தில் அவருக்குள்ள திறமையை எடுத்துக் காட்டுகிறது. அவருடைய நீட்டப்பட்ட கைகளும் விரல்களும் ஃபிலிப்பீனோ கிராமிய நடனத்தைவலியுறுத்துகின்றன. மோரோ நடனம் என்ற கலைப்படைப்பு உள்நாட்டவரைச் சித்திரிக்கிறது. ஃபிலிப்பீன்ஸ் நாட்டை, ஓவியக் கலையின் மூலம் மறுஉருவாக்கம் செய்ய முடியும் என்றும் கூறுகிறது.
நிதானக் கலை வழிகாட்டியின் நிறைவை எய்தியிருக்கிறோம்.
இந்த அத்தியாயம் உங்களுக்கு மகிழ்வூட்டியிருந்தால்,, வேறு கலை படைப்புகளைப் பற்றிய எங்களின் பிற அத்தியாயங்களையும் நீங்கள் நாடலாம். படைப்புகளைக் கலையுணர்வோடு கண்டு இரசிக்க, நிதானமான கலை வழிகாட்டி தனித்தன்மை மிகு நிதானமான பார்வை மற்றும் விழிநிலைப் பயிற்சியின் வழிஅர்த்தமுள்ள வகையில் நீங்கள் கலைப்படைப்பைக் காண உதவும் வகையில் தயாரிக்கப்பட்டது. (Slow Art Guide) நிதானக் கலை வழிகாட்டியின் படைப்புகள் அனைத்தும், நல்வாழ்வை ஆதரிக்கும் திட்டங்களுக்காகக் கருப்பொருள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பராமரிப்புத் திரட்டிற்குத் தேசியத் திரட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
உங்களுக்கு உணர்வு மற்றும் உணர்ச்சி சார்ந்த தேவையெனில், நீங்கள் Calm Room எனும் ஓய்வு அறையை நாடலாம். அது தேசியக் கலைக்கூடத்தின், நகர மண்டப இணைப்புக் கட்டட நிலவறையில் இருக்கின்றது. அங்கு நீங்கள் பத்து நிமிடத்திற்கு, விழிநிலைப்பயிற்சி மேற்கொள்ள இயலும்.
கலைக்கூடத்தில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள, உங்களை அழைக்கிறோம். உங்களைச் சுற்றிலும் இருக்கும் கலைப் படைப்புகளை ரசிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
Artwork details
Frame measure: 94.4 x 74 cm
Frame measure: 109.7 x 89.4 cm