Stop 2
5205

முகம்

ஃபுவா ஹரிபித்தாக்
Artwork
யூஓபி தென்கிழக்காசிய கலைக்கூடம் 7
Use headphones for a better listening experience and to be considerate to others.
5205.முகம்(0:00)
0:00
0:00

ஃபுவா ஹரிபித்தாக்கின் Face (முகம்), சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தின், நிதானக் கலை வழிகாட்டிக்கு வரவேற்கிறோம்.

நிதானமான, சிந்தனைமிகு கொள்கைகளால் உந்தப்பட்ட, நிதானக் கலை வழிகாட்டியின் ஒவ்வோர் அத்தியாயமும், கலைக்கூடத்தின் ஒவ்வொரு கலைப் படைப்பினுள்ளும் இட்டுச்சென்று, ஆழச் சிந்திக்க வைக்கும். அவசரமின்றி, நிதானமாக ஒவ்வொரு கலைப் படைப்பையும் கூர்ந்து ஆராய்வதும், விழிப்புடன் கருத்தூன்றிய முறையில் கலைப் படைப்புகளைத் துய்ப்பதுமே இந்த அனுபவம்.

 

இந்த உணர்வுமிகு, சிந்திக்கவைக்கும் முறையினுள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் தருணத்தில், எண்ணங்கள், உணர்வுகள், உடலுணர்ச்சி போன்றவை, சில நேரங்களில் உங்களைத் திணற வைக்கலாம். இன்று உங்களுக்கு அவ்வாறாக இருந்தால், ஒலியுணர்வு அனுபவத்தைத் தவிர்த்துவிட்டு, Calm Room எனும் ஓய்வு அறைக்கு நீங்கள் செல்லலாம்.

 

நிதானக் கலை வழிகாட்டி அனுபவ நிறைவில், இக்கலையுடன் ஆழ்ந்த உணர்வுபூர்வத் தொடர்பு இருப்பதுடன், இந்தத் தருணத்தை அனுபவித்து மகிழ்வீர்கள் என நம்புகிறோம்.

 

உங்களை உணரச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.  பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சிறிது ஓய்வெடுத்து, ஓவியக் கலை மூலம், உங்கள் மனம். உடல், ஆன்மா ஆகியவற்றுக்கு இதமளிக்க நேரம் ஒதுக்கியதற்கு உங்களுக்கு நீங்களே நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள்.

 

எளிய மூச்சுப் பயிற்சியைத் தொடங்குவோம். உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். எதிலும் மாற்றம் தேவையில்லை. இயல்பாகவே சுவாசியுங்கள்.

 

கண்களை மூடி, அவற்றை இளைப்பாறச் செய்யலாம் அல்லது மென்மையாக நோக்கலாம். மூச்சை உள்ளிழுத்து, வெளியே விடும்போது, உங்கள் சுவாச முறையைக் கவனியுங்கள். சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சுவாசம் நீண்டதாக, சரளமானதாக உள்ளதா? அல்லது குறுகியதாக, விரைவானதாக உள்ளதா?

 

விரும்பினால், உங்கள் வயிற்றில் கை வைத்துக் கொள்ளுங்கள். கை வைத்ததால் ஏற்படும் வெப்பததை உணருங்கள். ஒவ்வொரு முறையும் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும்போது, வயிற்றுப் பகுதி, சுருங்குவதையும் விரிவதையும் உணருங்கள். நீங்கள் சுவாசிக்கும்போது, உடலை இளைப்பாற விடுங்கள். உங்கள் சுவாசம், உங்களைத் தாங்கும் ஆதாரமாகட்டும்.

 

மூச்சை உள்ளிழுங்கள். வெளியே விடுங்கள். உள்ளிழுங்கள். வெளியே விடுங்கள்.

 

கண்களை மூடியிருந்தால் அவற்றை மெல்லத் திறக்கவும்

ஃபுவா ஹரிபித்தாக்கின் (முகம்) Face,

 

நாம் ஒன்று சேர்ந்து இந்தக் கலைப் படைப்பை ஆராயும்போதுஉங்களுக்குமிகவும் செளகரியமான வகையில் சுற்றிப் பாருங்கள். கலைப்படைப்பின் முன்னால், கலைக்கூடத்தின் தரையில் அமர்ந்து கூட நீங்கள் அந்தப் படைப்பைக் கண்டு இரசிக்கலாம். நீங்கள் அதை ரசிக்க சிறிது அவகாசமளிப்போம்.

 

முன்னால் இருக்கும் படைப்புப் பற்றிச் சிந்தியுங்கள். என்ன உணர்வு ஏற்படுகிறது?

 

உங்கள் கண்களைக் கவர்வது எது? எதைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறீர்கள்?

 

கலைப்படைப்பை ஒன்றாகக் காண்போம். இந்த கலைப் படைப்பின் எல்லா முகக் கூறுகளையும் அடையாளம் காண முடிகிறதா? எது உங்களை அதிகம் கவர்கின்றது? இடக் கண்ணா... வலக் கண்ணா? அல்லது மூக்கா? அல்லது வாயா? அல்லது முகவாய்க்கட்டையா?

 

இந்த ஓவியத்தினுள் உள்ள எண்ணங்களையோ உணர்ச்சிகளையோ ஆராய்வோம். ஓவிய முகபாவத்திலிருந்து நீங்கள் எத்தகைய உணர்வுகளை உணர முடிகிறது? அது ஆச்சரியம் அடைந்ததாகவோ, அறிய ஆர்வமுடையதாகவோ, சாந்தமானதாகவோ இருக்கிறதா?

ஓவியத்திலிருக்கும் முகத்துக்குரியவர், என்ன சொல்ல நினைக்கிறார் எனக் கற்பனை செய்யுங்கள். அவர் என்ன சொல்வார் என்று நினைக்கிறீர்கள்?

ஓவிய முகத்தில் பதிந்திருக்கும் பல்வகை வடிவங்களையும் வண்ணங்களையும் கவனியுங்கள். ஓவிய முகம் எங்கு நிறைவு பெறுகின்றது? ஓவியப் பின்னணி எங்கு தொடங்குகிறது?

 

ஓவியத்தில் செங்கருநீலம், ஒண் சிவப்புச் சாயம், பச்சை முதலிய பலவகைவண்ணங்கள் இருக்கின்றன.  பிளவுபட்ட வடிவங்கள், அவற்றின் எல்லைகள்,  குறுக்கீட்டுச் சந்திப்புகள் ஆகியவற்றை இந்த வண்ணங்கள் எடுப்பாகக் காட்டுகின்றன.

 

இந்தச் சித்திரவடிவம் உங்களுக்கு, எதையேனும் நினைவுபடுத்துகின்றதா?

 

பல்வண்ணக் காட்சிக்கருவியுனுள் பார்க்கும் அனுபவம், நீர் நிலையிலிருந்து சூரியஒளி பிரதிபலிப்பதோகவோ இருக்கலாம்.

 

உங்கள் மனதை உலாவ விட்டு, எதிர்கொள்ளும் எதையும் ஆராய்ந்தறியுங்கள்.

 

கலைப்படைப்பின் நடுவேயிருக்கும் வண்ணங்களை கவனிக்கவும், ஓவியங்களின் முகத்தோற்றத்தை வரையறுக்கும் கருமையான கூறுகளை. அவை, சுற்றியிருக்கும் வெளிர் வண்ணங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கின்றன எனக் கவனிக்க.

 

ஓவியத்தில் இருப்பவரின் எண்ணங்களை இந்தப் படைப்பு  பிரதிபலிக்குமா? உணர்ச்சிகள், முகங்களைச் சுற்றிச் சுழன்று, அவற்றின் உள்ளுணர்வுகளைப் வெளிப்படுத்துகின்றன.

 

நம் எண்ணங்களுடனும் உணர்வுகளுடனும் நேரத்தைச் செலவிடுவது  நம் உள்ளம், உடம்பு, உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் முக்கிய பயிற்சியாக விளங்கும். சுற்றிலும் நடப்பவற்றைப் பற்றி அவை நடக்கும்போதே விழிப்புடன் இருக்கும் இது  தியானப் பயிற்சிகளுக்கான அணுகுமுறைகளில் ஒன்று. முயன்று பாருங்கள். அசைவின்றி அமர்ந்து கண்களை மென்மையாக மூடுங்கள். உங்கள் உணர்வை, சுவாசத்தில் செலுத்துங்கள். ஒவ்வொரு மூச்சையும் உணர்ந்து உள்ளிழுத்து, வெளிவிடுங்கள். தற்போதைய கணத்துடன் தொடர்புப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

இப்போது, ஓவியப்படைப்பின் உருவத்தை மனத்திரையில் வைத்து, ஒரு கணம் உங்கள் முகத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.

 

உங்கள் சிரசிலிருந்து தொடங்கி, உடலில் இறுக்கமான பகுதி ஏதும் உள்ளதா எனப் பாருங்கள். மூச்சை ஆழமாக இழுத்து. உங்கள் சிரசில்   தொடங்கும் தசைத் தளர்வு தோள்களில் இறங்குவதைப் போல உணருங்கள். மூச்சை வெளிவிடும் ஒவ்வொரு முறையும், நெற்றியைச் சுற்றி இருக்கும் இறுக்கத்தையும், நெற்றியிலும், புருவ மத்தியிலும் இருக்கும் , அழுத்தத்தையும் விடுவிக்கவும்.

 

இப்போது, உங்கள் கவனத்தைக் கண்கள், நாசி, கன்னங்கள், > தாடை, ஆகியவற்றில் செலுத்துங்கள். அவை எப்படி இருக்கின்றன என்று உணர்ந்து அறியுங்கள்.

 

உங்கள் தாடை இறுக்கமாக இருக்கிறதா? கீழ்த் தாடையைத் திறந்தபடி, இலேசாகத் தொங்கவிடவும். மாற்றத்தை உணருங்கள்.

 

உங்கள் கவனத்தை மெதுவாகத் தோள்களுக்கு மாற்றுங்கள். மூச்சை உள்ளிழுக்கும்போது, இலேசாகத் தோள்களைக் காதருகே கொண்டு வாருங்கள். மூச்சை வெளிவிடும்போது, அவற்றைக் கீழே விழவிட்டு, இறுக்கம், கரைந்துபோவதை உணருங்கள்!

 

உங்கள் தோள்களை முன்னும் பின்னுமாக மெதுவாகக் கொண்டு வந்து, உணர்வுக் கிளர்ச்சி நிலையை, அல்லது இறுக்கமிக்க இடங்களைக் கண்டறியுங்கள்.

 

மெதுவாக, ஒவ்வொரு மூச்சிலும், உணர்வுநிலை, கீழ் நோக்கி, தோள்களிலிருந்து, நெஞ்சுப் பகுதிக்கு, அதன் பிறகு நேராகப் பாதங்களுக்கு நகரட்டும். கிளர்ச்சி நிலையைக் கவனியுங்கள் – வெதுவெதுப்பு நிலை. உடற் கூச்சம், அழுத்தம்.

 

இப்போது, இந்தக் கணத்தில், என்னென்ன எண்ணங்கள், உணர்வுகள் ஏற்படுகின்றன என்பதைக் கவனியுங்கள்.

 

உங்கள் உடலை நுட்பமாய்ச் சோதிக்கையில், முன்னர், ஓவிய முகத்தில் பிரதிபலித்த உணர்வுகளை நினைவுகூருங்கள். அதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உணர்கிறீர்களா? அந்த உணர்வை பகிர்ந்து கொள்ள முடியுமா?

 

அந்த உணர்வுகளை உடலின் எந்தப் பகுதியில் உணர்கிறீர்கள்?

 

உங்கள் உடலில் எவ்வாறு அவை அடையாளம் காட்டுகின்றன? உதாரணமாக, மகிழ்வு என்பது இலகுத் தன்மையையோ, நெஞ்சில் படபடப்பையோ ஏற்படுத்துகின்றதா? ஏக்கம் உங்கள் வயிற்றுப் பகுதியில், அல்லது தோள்களில் இருக்கின்றதா? சோகம் உங்கள் உற்சாகத்தைக் குறைக்கின்றதா, அல்லது முற்றும் இல்லை என்று ஆகிவிடுகிறதா? இவ்வாறான உடற் கிளர்ச்சி நிலைகளை ஆர்வத்துடன் அறியுங்கள்.

 

இப்போது, மீண்டும் உங்கள் உடலை நுட்பமாயய்ச் சோதித்து, வேறு வகையாக இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். நீங்கள் அறிவதை அரவணைத்து ஏற்றுக்கொள்ளுங்கள். அதைச் சரியென்றோ தவறென்றோ கொள்ளத் தேவையில்லை.

 

உண்மையில் உணர்ச்சிகளெல்லாம் திரவம் போன்றவை. அவை எப்போதுமே இடம் மாறும், நகரும். தற்போதைய அனுபவத்தை ஏற்றுக்கொண்டு, அதை மதியுங்கள்.

 

இறுதியாக, உங்கள் விழிப்புணர்வை விரிவுபடுத்தி, உங்கள் முழு உடலையும் ஆக்கிரமிக்கச் செய்யுங்கள். முழு உடலும் சுவாசிப்பது போல, சுவாசியுங்கள். ஒவ்வொரு மூச்சும் உங்களைத் தரையில் நங்கூரமிட்டுத் தாங்குவது போல உணருங்கள்.

 

மூச்சை இழுங்கள். மூச்சை விடுங்கள். மூச்சை இழுங்கள். மூச்சை விடுங்கள்.

 

தியானப் பயிற்சியின் நிறைவுக்கு வந்திருக்கும் நாம், “என்னுள்ளும், என்னைச் சுற்றிலும் என்ன நிகழ்கின்றது என்பதைப் பற்றி, எவ்வாறு மேலும் ஆர்வத்துடன் அறிந்துகொள்ள முடியும்?” என்னும் சிந்தனையில் ஈடுபடலாம். என் உள்ளுணர்வுகளின், எண்ணங்களின் வண்ணங்களும் வடிவங்களும் யாவை?

 

உங்கள் கண்கள் மூடியிருந்தால், மெல்ல கண்களைத் திறந்து, சுற்றுச் சுழலை மீண்டும் நோட்டமிடுக. உங்கள் சுவாசத்திற்கும், இந்தக் கணத்திற்கும் இருக்கும் தொடர்பை உணருங்கள்.

 

இப்போது, உங்கள் முன்னிருக்கும் கலைப் படைப்பை உற்று நோக்குங்கள்.

 

1954க்கும் 1956க்கும் இடைப்பட்ட காலத்தில், தாய் ஓவியர் ஃபுவா ஹரிபித்தாக் மிகப் பிரபலமாக விளங்கிய காலக்கட்டத்தில்,  ரோம் நகரில் அவர் பயின்ற காலக்கட்டத்தில் உருவாக்கிய ஓவியம் இது. ஓய்வின்றி உழைத்த ஓவியரான ஹரிபித்தாக், கடுமையான கல்விப் பாடத் திட்டங்களுடன் போராடி, பல்வேறு பள்ளிகளில் பயின்றார். பரிட்சார்த்த முறையில், பல்வேறு பாணிகளில் ஓவியங்கள் தீட்டியதில் அவர் குறிப்பிடத்தக்கவர். குறிப்பாக, Impressionism,  Cubism ஆகிய பாணிகள். -க்யுபிசம் ‘Cubism) என்பது 1900களின் தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பாணி. இதில், கலைஞர்கள், ஒரே நேரத்தில் வெவ்வேறு கோணங்களில் ஒரு பொருளைப் பார்க்கும்போது எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்தனர். க்யுபிசப் படைப்புகளில் பல சமயங்களில் மனிதர்களும் பொருள்களும் பல்வேறு பாகங்களின் கலவையாகவே சித்திரிக்கப்பட்டிருப்பார்கள்.

 

ஹரிபித்தாக்கின் பெரும்பாலான படைப்புகளுடன் ஒப்பிட்டால், Face என்னும் படைப்பு பெருமளவில் அருவமாகவே இருக்கும். தனியே பிரிந்துவந்தது போன்ற மீந்த பகுதிகளைக் கொண்டு, கண்கள், நாசி, உதடுகள் போன்ற முகத் தோற்றத்தை வடிவமைத்தார். சுருங்கச் சொல்லின், நம் மனங்களில் முகங்களை ஒன்றுசேர்க்கப் பல தனிக் கூறுகளைத் தருகிறார்.

 

நிதானக் கலை வழிகாட்டியின் நிறைவை எய்தியிருக்கிறோம்.

 

இந்த அத்தியாயம் உங்களுக்கு மகிழ்வூட்டியிருந்தால்,, வேறு கலை படைப்புகளைப் பற்றிய எங்களின் பிற அத்தியாயங்களையும் நீங்கள் நாடலாம்.  படைப்புகளைக் கலையுணர்வோடு கண்டு இரசிக்க, நிதானமான கலை வழிகாட்டி தனித்தன்மை மிகு நிதானமான பார்வை மற்றும் விழிநிலைப் பயிற்சியின் வழிஅர்த்தமுள்ள வகையில் நீங்கள் கலைப்படைப்பைக் காண உதவும் வகையில் தயாரிக்கப்பட்டது. (Slow Art Guide) நிதானக் கலை வழிகாட்டியின் படைப்புகள்  அனைத்தும், நல்வாழ்வை ஆதரிக்கும் திட்டங்களுக்காகக் கருப்பொருள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பராமரிப்புத் திரட்டிற்குத் தேசியத் திரட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.

 

உங்களுக்கு உணர்வு மற்றும் உணர்ச்சி சார்ந்த  தேவையெனில், நீங்கள் Calm Room எனும் ஓய்வு அறையை நாடலாம். அது தேசியக் கலைக்கூடத்தின், நகர மண்டப இணைப்புக் கட்டட நிலவறையில் இருக்கின்றது. அங்கு நீங்கள் பத்து நிமிடத்திற்கு, விழிநிலைப்பயிற்சி மேற்கொள்ள இயலும்.

 

கலைக்கூடத்தில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள, உங்களை அழைக்கிறோம். உங்களைச் சுற்றிலும் இருக்கும் கலைப் படைப்புகளை ரசிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

Transcript
Share
Artwork details
Artist Name
Fua Haribhitak
Full Title
Face
Time Period
c. 1956
Medium
Oil on canvas
Extent Dimensions (cm)
Dimensions 2D: Image measure: 65 x 55 cm
Frame measure: 74.6 x 64.5 cm
Credit Line
Collection of National Gallery Singapore
Geographic Association
Thailand
Accession Number
2015-00416