மறைமெய் யதார்த்தத்தின் மறுஉருவாக்கம்: ஹுவா
சுலைமான் இசாவின் The Mystical Reality Reinvented : Hua ( மறைமெய் யதார்த்தத்தின் மறுஉருவாக்கம்: ஹுவா), சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தின், நிதானக் கலை வழிகாட்டிக்கு வரவேற்கிறோம்.
நிதானமான, சிந்தனைமிகு கொள்கைகளால் உந்தப்பட்ட, நிதானக் கலை வழிகாட்டியின் ஒவ்வோர் அத்தியாயமும், கலைக்கூடத்தின் ஒவ்வொரு கலைப் படைப்பினுள்ளும் இட்டுச்சென்று, ஆழச் சிந்திக்க வைக்கும். அவசரமின்றி, நிதானமாக ஒவ்வொரு கலைப் படைப்பையும் கூர்ந்து ஆராய்வதும், விழிப்புடன் கருத்தூன்றிய முறையில் கலைப் படைப்புகளைத் துய்ப்பதுமே இந்த அனுபவம்.
இந்த உணர்வுமிகு, சிந்திக்கவைக்கும் முறையினுள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் தருணத்தில், எண்ணங்கள், உணர்வுகள், உடலுணர்ச்சி போன்றவை, சில நேரங்களில் உங்களைத் திணற வைக்கலாம். இன்று உங்களுக்கு அவ்வாறாக இருந்தால், ஒலியுணர்வு அனுபவத்தைத் தவிர்த்துவிட்டு, Calm Room எனும் ஓய்வு அறைக்கு நீங்கள் செல்லலாம்.
நிதானக் கலை வழிகாட்டி அனுபவ நிறைவில், இக்கலையுடன் ஆழ்ந்த உணர்வுபூர்வத் தொடர்பு இருப்பதுடன், இந்தத் தருணத்தை அனுபவித்து மகிழ்வீர்கள் என நம்புகிறோம்.
உங்களை உணரச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சிறிது ஓய்வெடுத்து, ஓவியக் கலை மூலம், உங்கள் மனம். உடல், ஆன்மா ஆகியவற்றுக்கு இதமளிக்க நேரம் ஒதுக்கியதற்கு உங்களுக்கு நீங்களே நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள்.
எளிய மூச்சுப் பயிற்சியைத் தொடங்குவோம். உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். எதிலும் மாற்றம் தேவையில்லை. இயல்பாகவே சுவாசியுங்கள்.
கண்களை மூடி, அவற்றை இளைப்பாறச் செய்யலாம் அல்லது மென்மையாக நோக்கலாம். மூச்சை உள்ளிழுத்து, வெளியே விடும்போது, உங்கள் சுவாச முறையைக் கவனியுங்கள். சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சுவாசம் நீண்டதாக, சரளமானதாக உள்ளதா? அல்லது குறுகியதாக, விரைவானதாக உள்ளதா?
விரும்பினால், உங்கள் வயிற்றில் கை வைத்துக் கொள்ளுங்கள். கை வைத்ததால் ஏற்படும் வெப்பததை உணருங்கள். ஒவ்வொரு முறையும் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும்போது, வயிற்றுப் பகுதி, சுருங்குவதையும் விரிவதையும் உணருங்கள். நீங்கள் சுவாசிக்கும்போது, உடலை இளைப்பாற விடுங்கள். உங்கள் சுவாசம், உங்களைத் தாங்கும் ஆதாரமாகட்டும்.
மூச்சை உள்ளிழுங்கள். வெளியே விடுங்கள். உள்ளிழுங்கள். வெளியே விடுங்கள்.
கண்களை மூடியிருந்தால் அவற்றை மெல்லத் திறக்கவும்
சுலைமான் இசாவின் மறைமெய் யதார்த்தத்தின் மறுஉருவாக்கம்: ஹுவா (The Mystical Reality Reinvented : Hua)
நாம் ஒன்று சேர்ந்து இந்தக் கலைப் படைப்பை ஆராயும்போதுஉங்களுக்குமிகவும் செளகரியமான வகையில் சுற்றிப் பாருங்கள். கலைப்படைப்பின் முன்னால், கலைக்கூடத்தின் தரையில் அமர்ந்து கூட நீங்கள் அந்தப் படைப்பைக் கண்டு இரசிக்கலாம். நீங்கள் அதை ரசிக்க சிறிது அவகாசமளிப்போம். முன்னால் இருக்கும் படைப்புப் பற்றிச் சிந்தியுங்கள். என்ன உணர்வு ஏற்படுகிறது?
உங்கள் கண்களைக் கவர்வது எது? எதைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறீர்கள்?
கலைப் படைப்பைக் கண்ணோட்டமிடுவோம். கூண்டை கூர்ந்து பாருங்கள். முன்பு பார்த்த அமைப்புப் போலத் தெரிகின்றதா? இவ்வாறான கூண்டை முன்பு எங்கு பார்த்தீர்கள்? அது எதற்குப் பயன்படுத்தப்பட்டது? இந்தக் கூண்டு இயற்கைப் பொருளான பிரம்பினால் செய்யப்பட்டு வெள்ளி நிறச் சாயம் பூசப்பட்டது, இந்தப் பொருளால், அது ஏன் செய்யப்பட்டது என நினைக்கிறீர்கள்?
இயற்கை, செயற்கைக் கூறுகளின் மாறுபாடுகள், எவ்வாறு கலைப்படைப்புக்குப் பொருள் அளிக்கின்றன என்று நினைக்கிறீர்கள்? ஓவியக் கலைஞர், எதையோ மறைக்க, அல்லது பாதுகாக்கத்தான் பிரம்பிற்கு வெள்ளி நிறச் சாயம் பூசினாரா?
இப்போது, கூண்டுக்குள்ளிருக்கும், ஒற்றைத் தண்டு ரோஜா மலரைப் பாருங்கள். ஓவியர் ஏன் ரோஜா மலரைத் தேர்ந்தெடுத்தார்?
கூண்டில் வேறு மலர் வரையப்பட்டிருந்தால், ஓவியத்தின் கருப்பொருள் வேறுபட்டிருக்குமா?
கூண்டின் மலர், சூரியகாந்தியாகவோ டெய்ஸியாகவோ இருந்தால் என்னவென்று எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு மலரும், தனித்தன்மை வாய்ந்த உட்பொருள் கொண்டிருக்கும். சூரியகாந்தியோ டெய்ஸி மலரோ ஓவியம் பற்றிய உங்கள் புரிதலை எவ்வாறு மாற்றியிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
ரோஜா மலர் மாறுபட்ட நிலையில் இருப்பதாக எண்ணிப் பாருங்கள். கூண்டின் பக்கவாட்டில், செங்குத்தாகச் . சாய்த்து வைக்கப்பட்டால்? கூண்டின் உட்பறத்திலிருக்கும் கயிற்றில் கட்டி, மலரைக் கூண்டின் நடுவில் தொங்கவிட்டிருந்தால்? மலரின் இவ்வாறான மாறுபட்ட நிலை ஒவ்வொன்றும், எதைக் குறிக்கும்?
மலருக்கும் கூண்டுக்கும் இருக்கும் உள்ள தொடர்பை நினைத்துப் பார்ப்போம். மலரின் வளர்ச்சியையும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் தடைக்கல்லாகக் கூண்டு விளங்குகிறதா? அல்லது ரோஜா மலருக்கு ஆதரவும் பாதுகாப்பும் வழங்கும் சரணாலயமாக அது விளங்குகிறதா?
உங்களைக் கலைப்படைப்பின் ஒரு கூறாகக் கற்பனை செய்யுங்கள். உங்களைக் கூண்டிலுள்ள ரோஜாவுடன் தொடர்புபடுத்துகிறீர்களா? அல்லது கூண்டுடன் தொடர்புபடுத்துகிறீர்களா? அல்லது இரண்டின் கலவை எனும் எண்ணமா? நம்மில் பலருக்கு நிகழ்காலச் சூழலைப் பொறுத்து, பல்வேறு கலைக் கூறுகள் பற்றி நாம் உணர்வது மாறுபடக்கூடும்.
பல சமயங்களில், நாமும் கூண்டு மலர் போல, கட்டுப்படுத்தப்படடது போல், அடைக்கப்பட்டது போல் வாழ்வதாக உணர்வோம். ஒருகாலத்தில் சுகமானதாக, பாதுகாப்பானதாக இருந்த ஒன்று, பின்னர் தேக்கமடைந்ததாக, கட்டுப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம். நமக்குச் சுகமளிக்கும் எல்லையைக் கடந்து, புது அனுபவங்களையும், வளர்ச்சியையும் பெற முயல்வோம்.
பிற நேரத்தில், பயத்தாலும் கவலையாலும், நாமே நமக்குத் தடுப்புச் சுவரென்ற உணர்வு ஏற்படும். பாதுகாப்பையும் நாம் நாடலாம் – கலைப் படைப்பின் கூண்டைப் போல,
எந்தச் சூழ்நிலையிலும், விழிநிலைப் பயிற்சியே நடப்பதைப் பகுத்தாயும் சிறந்த வழி. விழிநிலை நம் நினைவு, மனம், உடல் ஆகியவற்றில் என்ன நடக்கிறது என்பதை உணர உதவும் இடைநிறுத்தமாகவும் விளங்கலாம். தெளிவு ஏற்படுத்தி, நமக்கு இருக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து முன் செல்லவும் வழி வகுக்கலாம்.
முயன்று பாருங்கள். சலனமற்று இருங்கள். விரும்பினால் கண்களை இலசோக மூடிக் கொள்ளுங்கள். அல்லது மென்மையான பார்வையுடன் இருங்கள். உங்கள் சுவாசத்தில் மீண்டும் கவனம் செலுத்துங்கள். நிகழ்காலத்துடன் இணைந்திருங்கள்.
ஒவ்வொரு முறையும் மூச்சை இழுக்கும்போதும் உடலில் எப்பகுதியில் அதை உணர்கிறீர்கள், உங்கள் உடல் எப்படி அசைகிறது என்பதை கவனியுங்கள். மூச்சை வெளியேற்றும்போதும் அவ்வாறே செய்க.
சுவாசத்தை உள்ளிழுத்து, வெளிவிடுகையில், உடலுக்கும் உங்களைத் தாங்கும் நிலத்திற்குமுள்ள தொடர்பை உணர்க. மூச்சை வெளிவிட்டு, பதற்றம் குறைத்து, உடல் இலகுவாக இருக்கச் செய்யுங்கள். இக்கணம், எல்லா எண்ணங்களையும், உடல் உணர்வுகளையும் ஏற்று, அவற்றை அனுமதியுங்கள். அவை, அவ்வாறே இருக்கட்டும்.
ஒவ்வொரு புது சுவாசத்துடன், அன்பையும் நன்றியுணர்வையும் உங்களுக்கே சமர்ப்பியுங்கள். செளகரியமாக இருப்பின், கைகளால் உங்களையே தழுவிக்கொள்ளுங்கள்; உங்கள் கைகளை நெஞ்சிலும் தோளிலும் வையுங்கள். உங்களுக்கே உரிய அரவணைப்பையும் அன்பையும் சுவாசியுங்கள்.
சுவாசிக்கும்போது, உங்கள் நெஞ்சு, மெல்ல உயர்ந்து இறங்கட்டும். உங்கள் கரங்களை மெல்ல நீட்டுங்கள். இந்த நிலையில், உங்கள் முதுகுத் தண்டு மேலிருக்கும் கூரை நோக்கி நீள்வதைப் போல உணருங்கள்.
இந்த அசைவுகள் எதுவும் உங்களுக்குச் செளகரியமாக இல்லையெனில், எளிய முத்திரைகளைத் தொடருங்கள். இவ்வாறான பயிற்சியால், உங்களுக்கு ஏற்ற முத்திரையை மேற்கொள்வதே நோக்கம்.
உங்கள் கைகளைப் பக்கவாட்டிற்குக் கொண்டு வந்து, முத்திரையின் நிலைத்தன்மையை உணரவும்.
அடுத்த முறை மூச்சை இழுக்கும்போது. இந்த வாழ்க்கையின் பல்வேறு சாத்தியங்களை எதிர்நோக்கத் தயராக இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். அது உங்களுக்கு புது வாய்ப்பாககோ, ஏற்கனவே நினைத்திருந்த மாற்றமாகவோ இருக்கலாம். அவற்றை நினைக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் எண்ணங்களைக் கவனியுங்கள். சாத்தியமான இந்தப் பாதைளை ஆராய முற்பட்ட உங்கள் துணிவுக்கு, அன்பையும், நன்றியையும் உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளுங்கள்.
வாழ்வின் பல்வேறு கூறுகளையும் பகுத்து ஆராய, ஒவ்வொரு மூச்சையும் அனுமதியுங்கள்.
மூச்சை உள்ளிழுங்கள். வெளியே விடுங்கள். மூச்சை உள்ளிழுங்கள். வெளியேவிடுங்கள்.
தியானப் பயிற்சியின் இறுதிக் கட்டத்தை எய்தியிருக்கும் நிலையில், உங்களுக்குச் செளகரியமான வட்டத்தித்திலிருந்து வெளியேற, நீங்கள் மேற்கொள்ளக் கூடிய சிறு முயற்சி யாது? ஒருவேளை, நீங்கள் ஒருபோதும் அணியப் பயன்படுத்தாத நிறத்தைப் பயன்படுத்தலாம். புது வகை உணவை ருசிக்கலாம். சிறுகத் தொடங்கிப் பார்க்கலாம். இந்த முயற்சி எந்த அளவு, வளர்ச்சிக்கும் நலனுக்கும் பயனாய் விளங்குகிறது?
உங்கள் கண்கள் மூடியிருந்தால், மெல்லத் திறந்து, தற்போதைய பின்னணியுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள். ஒரு விநாடி, உங்கள் சுவாத்திற்கும் தற்போதைய கணத்திற்கும் இருக்கும் பிணைப்பை உணர முற்படுங்கள்.
உங்கள் முன்னிருக்கும் கலைப்படைப்பின் மீது, உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
இந்தக் கலைப்படைப்பு, ரெட்ஸா பியதாஸா, சுலைமான் எஸா ஆகியோரின், “மறைமெய் எதார்த்தத்தை நோக்கி : கூட்டாகத் தொடங்கப்பட்ட அனுபவ ஆவணங்கள்” எனும் 1974ஆம் ஆண்டுக் கண்காட்சியை மீண்டும் காட்சிக்கு வைப்பதற்குத் துணையாக 2015ல் கலைக்கூடத்தால் பணிக்கப்பட்டது.
இந்த கண்காட்சி, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் படைப்பதன் வழி, மேற்கத்தியப் பாரம்பரியத்திலான ஓவியம் மற்றும் படத் தயாரிப்புகளுடன் பார்வையாளர்கள் தொடர்புபடுத்துவதைச் சவாலுக்கு உட்படுத்தியது. கோட்பாட்டியல் கலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்மாதிரியான இது, மலேசியாவில் கலை வரவேறகப்பட்ட விதத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது கண்காட்சி, திறனாய்வுமிகு ஆராய்ச்சியை வலியுறுத்துகிறது; பாரம்பரிய ஓவிய வரையறைகளுக்குச் சவால் விடுத்து, ஆதிக்கம் செலுத்தும்மேற்கத்திய கலை விளக்கங்களை அது எதிர்த்தது.
“மறைமெய் யதார்த்தத்தின் மறுஉருவாக்கம்-ஹுவா” எனும்கலைப்படைப்பு, 1974ஆம் ஆண்டுக் கண்காட்சிக்கு இன்றையக் கண்ணோட்டத்தில் சுலைமானின் அளிக்கும் புதிய விளக்கமாகத் திகழ்கிறது.
நிதானக் கலை வழிகாட்டியின் நிறைவை எய்தியிருக்கிறோம்.
இந்த அத்தியாயம் உங்களுக்கு மகிழ்வூட்டியிருந்தால்,, வேறு கலை படைப்புகளைப் பற்றிய எங்களின் பிற அத்தியாயங்களையும் நீங்கள் நாடலாம். படைப்புகளைக் கலையுணர்வோடு கண்டு இரசிக்க, நிதானமான கலை வழிகாட்டி தனித்தன்மை மிகு நிதானமான பார்வை மற்றும் விழிநிலைப் பயிற்சியின் வழிஅர்த்தமுள்ள வகையில் நீங்கள் கலைப்படைப்பைக் காண உதவும் வகையில் தயாரிக்கப்பட்டது. (Slow Art Guide) நிதானக் கலை வழிகாட்டியின் படைப்புகள் அனைத்தும், நல்வாழ்வை ஆதரிக்கும் திட்டங்களுக்காகக் கருப்பொருள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பராமரிப்புத் திரட்டிற்குத் தேசியத் திரட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
உங்களுக்கு உணர்வு மற்றும் உணர்ச்சி சார்ந்த தேவையெனில், நீங்கள் Calm Room எனும் ஓய்வு அறையை நாடலாம். அது தேசியக் கலைக்கூடத்தின், நகர மண்டப இணைப்புக் கட்டட நிலவறையில் இருக்கின்றது. அங்கு நீங்கள் பத்து நிமிடத்திற்கு, விழிநிலைப்பயிற்சி மேற்கொள்ள இயலும்.
கலைக்கூடத்தில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள, உங்களை அழைக்கிறோம். உங்களைச் சுற்றிலும் இருக்கும் கலைப் படைப்புகளை ரசிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
Artwork details
Dimensions 3D: Object Dimensions: 90 x 57 x 57 cm