மான்டீன் பூன்மாவின் இப்படைப்பில் நூற்றுக்கணக்கான பீங்கான் கிண்ணங்கள் கவனமாக ஒன்றன் மீது ஒன்றாய் கோபுரமாக அடுக்கப்பட்டிருக்கின்றன. பின்புறச் சுவற்றில் பொருத்தப்பட்ட, விரல் வடிவ வெண்கல விரலெலும்பு போன்ற உண்குச்சிகள் சிவப்புத் துண்டுகளைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. துண்டுகளில் மனித மேலண்ணமும், கைவிரல் எலும்புகளும் அச்சிடப்பட்டிருக்கின்றன. கோபுரத்தைச் சுற்றி நான்கு வட்ட சாப்பாடு மேசைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும், மேலண்ண எலும்புகளும், கைகளும் அச்சிடப்பட்ட சிவப்பு மேசைத் துணி விரிக்கப்பட்டிருக்கிறது.
1993-ஆம் வருடத்தில், இந்தப் படைப்பை முதன்முதலில் பேங்காக் தேசியக் கலைக்கூடத்தில் நிறுவும் போது, ஒரு சில கிண்ணங்கள் தரையில் உருண்டு விழுந்து உடைந்துவிட்டன. அதன் சில்லுகளும் அமைப்பின் ஓர் அங்கமாகவே பிறகு வைக்கப்பட்டது. வாழ்க்கை நிரந்தரமற்றதும் எளிதில் முடியக் கூடியதும் ஆகும் என்பதை விளக்குவதாக இந்நிகழ்வு இருக்கிறது. உலகளாவிய புத்தமதத் தத்துவத்தால் உந்தப்பட்டு மான்டீன் உருவாக்கிய இந்தப் படைப்பு மனித வாழ்வு பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நமக்குத் தருகிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரையில் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் என்பதையும், மறுபடியும் இது மறுபிறப்பிலும் தொடரும் என்ற கண்ணோட்டத்தையும் இப்படைப்பு அளிக்கிறது.
இள வயதில் தன் மனைவியை மார்பகப் புற்றுநோய்க்குப் பலி கொடுத்த துயரத்தையும் பூன்மா இப்படைப்பில் தெரிவிக்கிறார். வருந்தத்தக்க முறையில், மான்டீனும் 2000-ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோய்க்கு உள்ளாகி, 47-வது வயதிலேயே மரணமடைந்தார்.