தேசியக் கலாச்சாரக் கழகம் வெளியிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து, 1971-ஆம் வருடத்தில், மலேசியக் கலைஞர்கள் சந்தித்துக் கொண்டிருந்த சிக்கலான நெருக்கடிகளில் வேரூன்றியதாக ‘அங்கிருந்து இப்போது’ படைப்பு விளங்குகிறது. உள்ளூர் மலாய் மற்றும் இஸ்லாமியக் கலாச்சாரக் கருத்துக்கள் மூலம் தேசிய அடையாளத்தை வளர்ப்பதில் கலைகள் உதவ வேண்டும் என்று கழகம் நிபந்தனை விதித்தது. முதல் பார்வையில், இஸ்மாயில் ஜெயினின் இந்தப் படைப்பு, மலாய வடிவமைப்புக் கூறுகளைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. இஸ்மாயிலின் படைப்பின் ஒரு பகுதியில், மலேசிய வாழ்க்கையைச் சித்தரிக்கும், உண் கலங்களுக்குக் கீழே விரிக்கப்படும், சிறிய அழகிய கைத்துணிகளும், வீதி ஓரங்களில் சாதாரணமாகக் காணப்படும் மார்னிங் குளோரி மலர்களும் படங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிறிது ஆராய்ந்து பார்த்தால், நுணுக்கமான நவீனக் கலை அம்சங்களைக் காண முடியும். இஸ்மாயில், வடிவங்களையும் வண்ணங்களையும் தேர்ந்தெடுத்திருக்கும் விதத்தில், மிகுந்த கட்டுப்பாடு தென்படுகிறது. படைப்பின் கூறுகளை, தேசீயவாத சூழலில் உபயோகிப்பதை விடுத்து, ஓவியத்திலிருக்கும் மற்ற உருவங்களுடனான வெளிசார்ந்த உறவைக் கருத்தில் கொண்டே, அலங்கார வேலைப்பாடுகளை அவர் வரைந்திருக்கிறார். இஸ்மாயிலின் நவீனத்துவச் சிந்தனையையும், ஓவியருக்கே உரிய கொள்கைகளையும், இந்த அணுகுமுறை பிரதிபலிக்கிறது. ”முதல் பார்வையில் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகத் தோன்றும் பொருள்களை வரைவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றின் பாங்குகள் மற்றும் பரப்புகள் மூலம் அவற்றிற்கிடையே ஒரு தொடர்பை உருவாக்க நான் முயல்கிறேன்,” என்று ஒரு நேர்காணலில் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
‘அங்கிருந்து இப்போது’ என்ற ஓவியத் தலைப்பில், இரண்டு தனித்தனியான பரிமாணங்களான வெளி மற்றும் காலம் ஆகியவற்றை அடுத்தடுத்து வைத்திருப்பது, ஓவியத்தின் வழக்கமான உள்ளர்த்தத்தைப் புறந்தள்ளிவிட்டு, நவீனக் கலையம்சத்தை அறிவிப்பது போல் உள்ளது.