கம்பி வலை சுற்றப்பட்ட மலிவான மரச்சட்டத்தில் ஒரு பொம்மை எம்-16 துப்பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. துப்பாக்கியின் மேல்புறத்தில் மரச்சட்டத்தின் உட்புறத்தில் வெள்ளைக் கோடுகளின் மேலே “வேலியின் மேல் ‘75” (அதாவது, “முதல் ‘75”) என்று அச்செழுத்தில் தடித்த கருப்பு வண்ணத்தில் பொறிக்கப்பட்ட சொற்கள், படைப்பின் தலைப்பைப் பறைசாற்றுகின்றன. அதிபர் சுகர்தோவின் புதிய அதிகாரச் சகாப்தத்தின்போது (1965 -1998), இந்தோனேசிய அரசியலில் இராணுவ அதிகாரம் ஓங்கியிருந்ததை இந்தக் கூறுகள் கூட்டாக சுட்டிக்காட்டுகின்றன. கொடூரமான அடக்குமுறையும் ஊழலும் இந்தோனேசிய சமூகத்தில் பரந்திருந்ததையும் சுட்டிக் காட்டுகின்றன. இந்தோனேசிய இராணுவத்தை ஏளனம் செய்வதோடு, அங்கு வியாபித்திருந்த வன்முறையை இலக்கியம் வாயிலாக நினைவூட்டுவதாகவும் இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படைப்பில், ஓவியர் எஃப்எக்ஸ் ஹர்சொனொ, தன்னைக் வெளிப்படுத்தக் கூடிய அனைத்து ஓவியக் குறியீடுகளையும், சுவடுகளையும் நீக்கிவிட்டதோடு, படுகொலைகளையோ அல்லது துன்பங்களையோ இதில் குறிப்பிடவில்லை. இருந்த போதிலும், ‘வேலியின் மேல்’ ஓவியம் அரசியல் ரீதியான உணர்வைத் தூண்டிவிடும் பொதுக் கருத்துகள் சார்ந்த படைப்பாகவும், வெளிப்படையாக விமர்சிக்கின்ற படைப்பாக்கவுமே அமைந்திருக்கிறது. இந்தப் படைப்பு உருவான அதே ஆண்டில், ஹர்சொனொ, கலை மற்றும் கலாச்சாரத்தில் அரசாங்கம் கொண்டிருந்த தாக்கத்திற்கு மாற்றாக, இந்தோனேசிய நவீனக் கலை இயக்கத்தை அமைத்தார். இந்தக் குழுவின் நோக்கம், அழகியல் கூறுகளை வர்ணிப்பது மட்டுமல்லாமல், தங்களைச் சுற்றியுள்ள சமூக மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டுவதும் ஆகும்.