‘சிவந்த காலையின் மகிமையும் சிதைவுற்ற துப்பாக்கியும்’ என்ற இந்தப் படைப்பில், தனித்து விடப்பட்டிருக்கும் நிலப்பரப்பில் விசித்திரமான கற்பனை உருவங்களின் தொகுதி நிறைந்திருக்கிறது. 1970-களில் பிரடுயங் எம்ஜரோன் தாய்லாந்தின் நிலைமையை விமர்சித்து, அதைத் தொடர்புப் படுத்தி இந்தப் படைப்பைப் படைத்திருக்கிறார். அந்தக் காலக் கட்டத்தில், மாணவர்களின் கிளர்ச்சியை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட இராணுவ வன்முறைத் தாக்குதலை இந்த ஓவியம் பிரதிபலிக்கிறது.
எம்ஜரோன் இப்படைப்பில் துப்பாக்கிகள் உடைந்தும், தொய்வுற்றும், சிதைவுற்றும் போனது போல் காட்டியுள்ளார். இவை எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் உயிருள்ளவையாக இருந்தது போலவும் இப்போது, கெட்டுப்போய் சிதைவுற்றிருப்பது போலவும் காட்டப்பட்டிருக்கின்றன. மரணம், நிலப்பரப்பைச் சிதைத்திருக்கிறது. ”சிதைவுற்ற” துப்பாக்கிகளில் எலும்பு மிச்சங்கள் இருக்கின்றன. மலையாகக் குவிந்திருக்கும் எலும்புகளின் மேலே தாய்லாந்தின் கொடி இருப்பதாக ஓவியதின் பின்புலத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளின் முனைகளில் மண்டையோடுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஓவியத்தின் வலது பக்கத்தில், புத்தரின் தூண்டிக்கப்பட்ட தலை அழுகிறது.
இரத்தம் வடிகிற நிலவின் ஒளியில் அவரின் கண்ணீர்த் துளி பிரகாசிப்பது அதை இன்னும் மிகைப்படுத்திக் காட்டுகிறது, மரணமானது இந்தத் துயரம் நிரம்பிய நிலப்பரப்பைத் தாக்கி இருந்தாலும், அங்கே கொடிகளும் தனித்து ஒளிரும் மலரும் இருக்கின்றன.
தாய்லாந்து இராணுவ அதிகாரிகளால் “இடதுசாரிகள்” என்று கருதப்பட்ட ஓர் ஓவியர் குழு நடத்திய கண்காட்சியில் இந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது 1976ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி திறக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளில், பாங்காக்கில் உள்ள தாம்மாசாட் பல்கலைக்கழகத்தில்,
இராணுவத்தினரும் காவல் துறையினரும், அங்கு நடந்த மாணவர் பேரணி மீது தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கானோரைக் படுகொலை செய்தனர், ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்தனர். இந்த ஓவியத்தின் கற்பனைப் பாங்கு அந்தக் காலக் கட்டத்தில் தாய்லாந்தில் சூழ்ந்திருந்த படுகொலைகளையும், வன்முறைகளையும், பொருத்தமாகப் படம்பிடித்திருக்குறது.