ஜியார்ஜெட் சென்: இல்லத்தில் இருப்பதுபோல் உலகில் எனும் இந்தக் கேளொலிச் சுற்றுலாவிற்கு உங்களை வரவேற்கிறோம்.
இந்தச் சுற்றுலா சென்னின் சுவாரசியமான வாழ்க்கை, பயிற்சி மற்றும் அவரது காலத்தின் கலை உலகில் அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகியவற்றின் வழியாக உங்களை அழைத்துச் செல்கிறது. சென்னின் முக்கியக் கலைப்படைப்புகள் அடங்கிய இந்தச் சுற்றுலாவை நீங்கள் கண்டுவரும்போது, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காப்பகப் பொருள்களை ஆராயவும் நேரம் ஒதுக்குங்கள், அவற்றில் சில முதல் முறையாகக் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
சென்னின் விருப்பமான விஷயங்களைப் பார்ப்பதற்கு முன்பு நீங்கள் பார்க்கும் மூன்று ஓவியங்கள்: அசைவற்ற வாழ்வு ஓவியம், மக்கள் மற்றும் இயற்கையெழில் காட்சிகள். சென் அன்றாட வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டார். அவரது ஓவியங்கள் அவர் வாழ்ந்த பல நாடுகளில் இருந்த சூழல்களின் அன்றாட விவரங்களைப் பிரதிபலிக்கின்றன.
சென் தனது அசைவற்ற வாழ்வு ஓவியங்களில் இடம்பெறும் ஒவ்வொரு பொருளையும் எவ்வாறு கவனமாகவும் வேண்டுமென்றேயும் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு அசைவற்ற வாழ்வு ஓவியமான சந்திர விழா மேசை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கே, சந்திர விழா எனப்படும் சீன நடு-இலையுதிர்க்கால விழாவுடன் தொடர்புடைய விளக்குகள் மற்றும் பம்ப்ளிமாஸ் பழம் ஆகியவை சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களின் பிரகாசமான, பண்டிகைத்தொனி வண்ணச்சாயல்களில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்விழாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய டியோச்சியூ மற்றும் வேகவைத்த சந்திரப் பணியாரங்கள் மேசையின் மையப் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.
அசைவற்ற வாழ்வு ஓவியங்கள் பொதுவாகக் கிடைமட்டக் கோர்வைகளைக் கொண்டிருக்கும். ஆனால் மேசைக்கு மேலே இரண்டு தொங்கும் விளக்குகளைச் சேர்ப்பதன் மூலம், சென் இந்த மரபை எவ்வாறு தகர்த்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இதனால் நம் கண்கள் சந்திரப் பணியாரங்களை நோக்கி மட்டுமல்லாமல், அவற்றுக்கு மேலே தொங்கும் விளக்குகளை நோக்கியும் இழுக்கப்படுகின்றன.
ஒளியையும் நீரையும் வரைவதில் சென்னுக்கு இருந்த திறமையை சிங்கப்பூர் நீர்முகப்பு ஓவியம் காட்டுகிறது. மென்மையான, கலவையான தூரிகையடிப்புகளால் வானத்தையும் மேகங்களையும் அவர் வண்ணம் பூசுகிற விதமும், சிறிய மற்றும் விரைவான வண்ணத் தெளிப்புகளால் நீரை வரைந்த விதமும், இந்த ஆற்றங்கரைக் காட்சியின் இயக்கத்தையும் மனநிலையையும் அப்படியே படம் பிடித்து, அதை உயிர்ப்பிக்கிறது.
இந்தச் சுற்றுலாவின் அடுத்த நிறுத்தத்தில் இடம்பெறுவது மலாய்த் திருமணம். திருமண விழாவின் உயிரோட்டமான மற்றும் துடிப்பான காட்சியை அவர் வழங்கியிருக்கும் விதம், வண்ணம் மற்றும் மக்களைப் பற்றிய சென்னின் பார்வையை விளக்குகிறது.
இந்த ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய கலைப்படைப்புகளைப் பற்றிய மேலோட்டமான ஒரு பார்வையை வழங்குகின்றன. சென்னின் படைப்புகள், வட்டாரத்தைப் பற்றிய அவருடைய தனித்துவமான உளப்பார்வையை, ஒரு வேறுபட்ட பாணியில் வடிகட்டிக் காட்டுகின்றன. அந்தப் பாணியானது பாரிஸிலும் நியூயார்க்கிலும் அவரது ஆரம்பகாலக் கல்விப் பயிற்சியிலும், தன்னைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஆர்வத்திலும் வேரூன்றிய ஒன்றாகும்.