மலாய்த் திருமணம் என்ற ஓவியத்தில், பொதுவாக நாஃபா என அழைக்கப்படும் நன்யாங் நுண்கலைக் கழகத்தின் முன்னுள்ள திறந்த வெளியில் நடைபெறும் திருமணக் கொண்டாட்டத்தை சென் பதிவுசெய்கிறார். அவர் 1954 முதல் 1980 வரை நாஃபா-வில் கற்பித்தார். அப்போது இந்தக் காட்சியைப் பள்ளியிலிருந்தே கவனித்தார். 1960-களில் இருந்த வாழ்க்கையின் ஒரு சிறு துண்டான இந்தக் காட்சி, சாதாரண வாழ்க்கையின் சந்தோஷங்களைச் சித்தரிப்பதில் சென்னுக்கு இருந்த ஆர்வத்தை நிரூபிக்கிறது.
திருமண விருந்தினர்கள், பிரகாசமான, துடிப்பான வண்ணங்களில் உடையணிந்து கூடாரங்களின் கீழ் கூடி, உணவருந்தியவாறே இசைக்கலைஞர்கள் இசைப்பதை வேடிக்கைப் பார்க்கிறார்கள். சென் வண்ணத்தைப் பயன்படுத்திய விதம் இந்தக் காட்சியின் கொண்டாட்டம் மற்றும் உற்சாகத்தை நமக்கு வழங்குகிறது. திருமண விருந்தினர்களின் ஆடைகளில் துடிப்பான மற்றும் மாறுபட்ட வண்ணத்தொனிகள் இருந்தபோதிலும், அவர்களின் வடிவங்கள் அனைத்தும் இணக்கமாக ஒன்றுகூடியவாறு இருக்கின்றன.
கூடாரத்தின் இடதுபுறம் உள்ள மரம் மற்றும் அலங்காரத் தோரணங்களை உற்றுப் பாருங்கள். இழைநயத்தை வெளிப்படுத்த சென் தூரிகையடிப்புகளைப் பயன்படுத்தியிருக்கும் விதத்தை நீங்கள் கவனித்தீர்களா? எடுத்துக்காட்டாக, மரத்தின் இலைகளை வரைவதற்குப் பயன்படுத்தப்படும் குறுகிய பதிப்புண்டாக்கும் தூரிகைகள், அதற்குக் கீழேயுள்ள புங்கா மங்கா என்ற பனைமலர் வடிவ அலங்காரங்களை வரையப் பயன்படுத்தப்படும் நுண்ணிய, துல்லியமான தூரிகையடிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இவ்வாறாக, மாறுபட்ட தூரிகையடிப்புகள் இருந்தபோதிலும், இந்த ஓவியத்தில் ஒட்டுமொத்த ஒத்திசைவுத்தன்மை இன்னும் உள்ளது.