1953-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சீன வர்த்தக சபையில் தனது முதல் தனிக் கண்காட்சி திறக்கப்படுவதற்கு முன்பு இரண்டு வருடங்கள் மட்டுமே சென் பினாங்கில் இருந்தார். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை மலேயாவுக்கு சென் வந்ததன் பயனாகும்.
1953 நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட 80 ஓவியங்களில் நீங்கள் இங்கு காணும் நான்கு ஓவியங்களும் அடங்கும். சீனா மற்றும் அமெரிக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்னின் முந்தைய பயணங்களின் விளைவாக உருவான படைப்புகள் இதில் அடங்கும், இது சென்னை ஒரு நன்கு பயணித்த மற்றும் நிறுவிக்கொண்ட கலைஞராக ஆக்கியது. இந்தக் கண்காட்சியில் முதன்முறையாக மலேய இயற்கையெழில் காட்சிகளைக் கொண்ட படைப்புகளையும் அவர் காட்சிப்படுத்தினார்.
சென் வெப்பமண்டலத்தில் உள்ள தனது புதிய வீட்டின் அழகைக் கண்டு மயங்கினார். மேலும் அவர் தன்னைச் சுற்றியுள்ள ஒளி மற்றும் இயற்கையெழில் காட்சிகளைச் சித்திரமாக்க விரும்பினார்.
உங்கள் இடப்புறமுள்ள பத்து பெரிங்கி (பினாங்) எனும் படைப்பு, வெளிப்புறங்களை வண்ணம் தீட்டுவதில் சென்னுக்கு இருந்த திறமையைக் காட்டுகிறது. வலுவான சூரிய ஒளியைப் பனை இலைகள் வடிகட்டி அனுப்புவதை அவர் பல்வேறு வண்ணங்களில் அமைந்த குறுகிய, விரைவான தூரிகையடிப்புகளின் மூலம் சித்தரிக்கிறார். ஒவ்வொரு நாளும் சீரான நேரத்தில் வேலைகளைச் செய்து, ஐந்து நாள்களில் இந்த ஓவியத்தை வரைந்து முடித்ததாக சென் தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.
உங்கள் இடப்புறச் சுவரிலுள்ள தகரச் சுரங்கம் (ஈப்போ) எனும் படைப்பு, மலேயாவில் தான் வாழ்ந்த காலத்தில் வட்டாரப் பயணங்களில் சென்னுக்கு இருந்த ஆர்வத்தை மேலும் நிரூபிக்கிறது.
பழுப்பு, ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற வண்ணச்சாயல்களின் செழுமையைக் கவனியுங்கள். கரடுமுரடான நிலப்பரப்பைக் காட்சிப்படுத்துவதற்காக இவ்வண்ணங்களை சென் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்திருக்கிறார். குளிர்ச் சாம்பல் மற்றும் நீல நிறங்களின் தந்திரப் பயன்பாட்டால் இந்த வண்ணங்களை அவர் மேலும் எடுப்பாக்கிக் காண்பித்துள்ளார். சென் தனது வண்ணத்தட்டுகளின் வண்ணங்கள் முழுவதையும் தீவிரமாகப் பயன்படுத்தி தனது வெவ்வேறு சூழல்களின் சுற்றுப்புறங்களைச் சிறப்புறப் படமாக்கியிருக்கிறார்.
இந்தக் கண்காட்சியில் கவர்ந்திழுக்கக்கூடிய இந்த சுய உருவப்படமும் அடங்கும். இந்தப் படம் 1946-ஆம் ஆண்டில் சென் சீனாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வண்ணமிடப்பட்டது. சுய உருவப்படத்தின் அளவு சென்னின் உறுதியைக் காட்டுகிறது, மேலும் சென் தன்னை ஒரு தொழில்முறைக் கலைஞராக முன்வைப்பதில் கவனம் செலுத்துவதையும் காட்டுகிறது. அவருடைய சுயப்படம் முழுச் சட்டத்தையும் நிரப்புகிறது, அவருடைய இருப்பை அது உறுதிப்பட நிலைநிறுத்துகிறது.