சென் காட்சிப்படுத்திய ஒரு சில நிர்வாண ஓவியங்களில் இந்தப் படைப்பும் ஒன்றாகும். இது அவரது ஆரம்பகால செம்மைக்கலைப் பயிற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு; அத்தோடு, ஒரு கலை மாணவராக அவர் கற்றுக்கொண்ட திறன்கள் மற்றும் நுட்பங்களையும் இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஓவியம் கவனம் செலுத்துவது, மாதிரியின் உடலில் மட்டுமே. மாறாக, மாதிரியின் முக அம்சங்கள் தெளிவற்றவையாக இருப்பதோடு, அவளது பார்வையானது, பார்வையாளரிடமிருந்து விலகிச் செல்கிறது.
அடர்த்தியாகப் பூசப்பட்ட வண்ணப்பூச்சின் மீது செய்த கட்டுப்பாடற்ற துடைப்புகள் மூலம், மாதிரியின் உடல் வளைவுகள் மற்றும் புடைப்புகளில் சென் கவனம் செலுத்துகிறார். இம்பேஸ்டோ எனப்படும் இந்த நுட்பம் இழைநயத்தில் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது. ஓவியத்தை உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்தால், கித்தானின் மேற்பரப்பிற்கு மேலே இம்பாஸ்டோ எவ்வாறு உயர்கிறது, அதன் மூலம் பரிமாணத்தையும் கன அளவையும் எவ்வாறு உருவாக்குகிறது என்பதை நீங்கள் காணலாம். அவ்வாறு செய்யும்போது, மாதிரியின் இடுப்பு மற்றும் தொடைகளுக்கு சென் நம் கவனத்தை ஈர்க்கிறார், அங்கு ஒரு துணி கலைநயத்துடன் கிடத்தப்பட்டுள்ளது.
தனது உருவப்படப் படைப்புகளுக்காக சென் நன்கு அறியப்பட்டாலும், அவரது நிர்வாண ஓவியங்கள் மற்றும் நிர்வாண உருவத்திட்டப்படங்கள் மிகவும் அரிதானவை. சென் வரைந்த ஒரே நிர்வாண எண்ணெய் ஓவியம் இதுவாகும், இது தற்போது ஒரு பொதுக் கலைச் சேகரிப்பில் இருப்பதாக அறியப்படுகிறது.
இந்த நடைபாதையில் நீங்கள் காணும் மற்ற நிர்வாண உருவத்திட்ட ஓவியங்களைப் போன்று, இந்தப் படைப்பையும் சென் பாரிஸில் தனது முறைசார் கலைக் கல்வியின்போது உருவாக்கியிருக்கலாம்.
அக்காடமி கொலரோசி மற்றும் அக்காடமி பிலோல் ஆகியவற்றில் சென் பெற்ற கல்விப் பயிற்சியின் போது பாடத்திட்டத்தின் ஒரு அடிப்படை அங்கமாக உருவ ஆய்வுகள் இருந்தன.
சுண்ணச்சாந்து வார்ப்புகளிலிருந்து வரைவதைக் காட்டிலும், நிர்வாண மாதிரிகளைப் பார்த்து வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல். வரைகலைஞர்கள் மனித வடிவத்தைப் பிரதிபலிப்பதில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள ஒரு முக்கியமான வழியாகும்.