கருப்பைத் தொடர் #7
டான் ஓ பாங்கின் (Tan Oe Pang) 'ஹான் சாகசக் கலைஞர்' மற்றும் சூசி வோங்கின் (Susie Wong) 'கருப்பைத் தொடர் #7' ஆகிய இரண்டு படைப்புகளிலும் மனித உருவங்கள் இடம்பெற்றிருந்தாலும், அவை வெவ்வேறு வழிகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இங்கே, மனித உருவம் அசைவற்று இருக்கிறது. ஒரு வயதான பெண், நிர்வாணமாக, கருவைப் போன்ற நிலையில் சுருண்டு படுத்திருக்கிறாள். அவள் நம்மிடமிருந்து விலகி, தனக்குள்ளேயே திரும்பியிருக்கிறாள்; தன்னை யாரும் பார்க்க வேண்டும் என்று அவள் விரும்பவில்லை, யாருக்காகவும் அவள் நடித்துக் காட்டவும் இல்லை.
பெண் நிர்வாணம் பற்றிய பெரும்பாலான சித்தரிப்புகள் இளமையையும் அழகையுமே உயர்வுப்படுத்துகின்றன. அப்படியிருக்க, வோங் ஏன் ஒரு முதிர்ந்த உடலை, எந்தவித மறைப்பும் அலங்காரமும் இல்லாமல் காட்டத் தேர்ந்தெடுத்தார்? பல நூற்றாண்டுகளாகப், பெண் நிர்வாணம் ஆண்களால் வரையப்பட்டு வருகிறது; பெரும்பாலும் ஆசை அல்லது அழகியல் முழுமையின் கண்ணோட்டத்தில்தான் அது சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இங்கே, ஒரு பெண் மற்றொரு பெண்ணை வரைகிறார். இது, பெண் உடல் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதையும், யார் பார்ப்பதற்கு உரிமை பெற்றவர்கள் என்பதையும் மறுபரிசீலனை செய்ய நம்மைத் தூண்டுகிறது.
வோங்கின் ஓவியம், நீண்ட காலமாக உணர்வுசார்ந்ததாக, ஏன், தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படும் ஒரு கலை வகையைத் தொடுகிறது; குறிப்பாக நிர்வாணம் பெரும்பாலும் ஆபாசமாகக் கருதப்படும் பல ஆசியச் சூழல்களுக்கு இது பொருந்தும். 1990-களில், புதிய கலை வடிவங்கள் உருவாகி வந்தபோது, வோங், ஜிம்மி ஆங் (Jimmy Ong) மற்றும் குழு 90 உடன் தொடர்புடைய ஓவியர்கள் தங்கள் கலையில் மனித உருவத்தைப் படிப்பதில் உறுதியாக இருந்தனர். நிர்வாணத்தைப் படிப்பதற்கு முறையான தளங்கள் இல்லாத ஒரு காலக்கட்டத்தில், வோங் தனது சொந்த வீட்டிலேயே உயிரி வரைதல் பயிற்சி அமர்வுகளைத் தொடங்கினார். அவர் பெண்களுக்காக ஒரு முறைசாரா இடத்தை உருவாக்கினார்; எழில்காட்டுநராக நிற்கத் தயாராக இருந்த குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்தார். இந்த அமர்வுகள் மிகவும் தனிப்பட்டவையாக இருந்தன. அவை ஓவியர் மற்றும் எழில்காட்டுநர் ஆகிய இருவருக்கும் சிந்திக்கவும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்க்கவும் இடத்தையும் வாய்ப்புகளையும் உருவாக்கின.
