ஓவியர்கள் கிராமத்தைச் சுற்றி: லோரோங் கம்பாஸில் உள்ள விவசாய நிலப்பரப்பு
ஹேசல் மெக்கின்டோஷின் (Hazel McIntosh) இரண்டு மை ஓவியங்கள் செம்பவாங் பகுதியின் கிராமப்புற வெளிப்பகுதிகளைக் காட்டுகின்றன. வேகமான, இயல்பான கோடுகளைப் பயன்படுத்தி, அவருக்குத் தனித்துத் தெரிந்தவற்றை அவர் வரைந்தார்: கோழிகள், வாத்துகள், வாழை மரங்கள், 226 என்ற எண் குறிக்கப்பட்ட ஒரு கொல்லைப்புறக் கொட்டகை. முதல் பார்வையில், அந்தப் பாணி சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு கோடும் ஒரு நோக்கத்துடன் வரையப்பட்டது. மெக்கின்டோஷ் அந்த நிலப்பரப்பை விவரமாக மீண்டும் உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. அந்த இடத்தில் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட உணர்வுகளுக்கு அவர் பதிலளித்தார்.
மெக்கின்டோஷ் இந்த ஓவியங்களை செம்பவாங், 61-பி லோராங் கம்பாஸில் வசித்தபோது வரைந்தார். அந்த இடம் ஒரு காலத்தில் 'தி ஆர்ட்டிஸ்ட்ஸ் வில்லேஜ்' குழுவின் இருப்பிடமாக இருந்தது. 1980-களின் பிற்பகுதியில் டாங் டா வூவால் (Tang Da Wu) இணைந்து நிறுவப்பட்ட 'தி ஆர்ட்டிஸ்ட்ஸ் வில்லேஜ்' சிங்கப்பூரின் தொடக்கக்கால சமகாலக் கலைக்குழுக்களில் ஒன்றாகும். அந்த நேரத்தில், சிங்கப்பூரில் வரைகூடங்களுக்கான இடங்கள் அரிதாக இருந்தன, மேலும், நகர விரிவாக்கம் ஒவ்வொரு நாளும் அதிக நிலத்தை ஆக்கிரமித்தது. நகரத்திலிருந்து விலகியிருந்த, 61-பி லோராங் கம்பாஸ் கலைஞர்களுக்கு வாழவும், படைப்புகளை உருவாக்கவும், தங்கள் சகக் கலைஞர்களுடன் சுதந்திரமாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் ஓர் இடத்தை வழங்கியது.
மெக்கின்டோஷ், டாங் அவர்களின் துணைவியாவார், மேலும் அந்தக் குழுவில் இருந்த சில பெண் ஓவியர்களில் ஒருவராகவும் இருந்தார். அவரது ஓவியங்கள், ஓவியர்கள் கலைப்படைப்புகளை உருவாக்குவதோடு வீட்டு வேலைகளையும் சமநிலைப்படுத்திய, அனைவராலும் பகிரப்பட்ட, வாழ்விடமாக இருந்த அந்த இடத்தின் காட்சிகளை வழங்குகின்றன. 1989-ல், அவர் அந்தக் குழுவின் 'முதல் திறந்தவெளி வரைகூடக் கண்காட்சி' என்ற கண்காட்சியில் பங்கேற்றார். கிராமப்புற நிலப்பரப்பு சீரான வரிசைகளில் அமைந்த பொதுக்குடியிருப்புக்கான அடுக்குமாடி வீடுகளுக்கு வழிவிட்டு அகலும் வரை, அந்தக் குழுவினர் லோராங் கம்பாஸில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தங்கியிருந்தனர்.
