சாம்பல் நிற நிழல்கள்
பருத்தியால் ஆன இச்சதுரத் துணி, முதலில் பார்க்கும்போது எளிமையாகவும், சாதாரணமாகவும் தோன்றலாம். ஆனால் உற்றுப் பாருங்கள். மடிப்புகள், மடிப்புகளின் அடுக்குகள மற்றும் இழையமைப்புகள் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்பது சிறிய சதுரங்களை நீங்கள் கவனிக்கத் தொடங்குவீர்கள். நேர்த்தியான மூன்றுக்கு மூன்று கட்டமாக அடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படைப்பு, ஒரு மென்மையான மற்றும் தொட்டுணரக்கூடிய தாள உணர்வை வெளிப்படுத்துகிறது. நீங்கள் பார்ப்பது போலவே உணரும் ஒரு விஷயம் இது.
உடுப்புத்துணித் (Textile) துறையில் பயிற்சி பெற்ற கலைஞரான எங் டௌ (Eng Tow), நீண்ட காலமாக பல்வேறு கலை வடிவங்களிலும் பல்வேறு துறைகளிலும் பயணித்து வருகிறார். ஓவியர், கைவினைஞர், வடிவமைப்பாளர் - இவை அவருக்குத் தனித்தனிப் பாத்திரங்கள் அல்ல. அவை உலகத்துடன் ஈடுபடுவதற்கான ஒன்றோடொன்று இணைந்த வழிகள். அவர் பயன்படுத்தும் பொருள்கள் துணி, காகிதம் முதல் கார்பன் ஃபைபர் (carbon fibre) மற்றும் வெண்கலம் வரை பரவியுள்ளன. அவரது கலைப்பணி காட்சிக்கூடங்களுக்கு அப்பாற்பட்டது; அவர் புத்தகங்கள், ஆடைகள் மற்றும் ஹோட்டல் உட்புறங்களை வடிவமைத்துள்ளார். ஆனால் கலை வடிவம் எதுவாக இருந்தாலும், அவர் இயற்கை மற்றும் கண்ணுக்குப் புலப்படாதவற்றின் மீது கவனத்துடன் இருக்கிறார்.
1960-களில் உருவாக்கப்பட்ட இக்கலைப்படைப்பு, சிங்கப்பூரின் கலை உலகில் ஏற்பட்ட மாற்றத்தின் காலத்தைப் பிரதிபலிக்கிறது. ஓவியர்கள் புதிய அணுகுமுறைகளை ஆராய்ந்து வந்தனர். அவர்கள் மரபு ஓவியம் மற்றும் சிற்பக்கலைக்கு அப்பால் சென்று, உடுப்புத்துணி, நெகிழி அல்லது எஃகு போன்ற பொருள்களைக் கொண்டு ஆய்வு முயற்சிகளைச் செய்தனர். டௌவைப் பொறுத்தவரை, ஒளியும் வெளியும்கூட வடிவமைக்கப்படக்கூடிய பொருள்களாகவே இருந்தன.
