ஓவியர், இந்த எண்ணெய் வண்ண ஒவியத்தில் பர்மாவிலிருக்கும் இரண்டு குறிப்பிடத்தக்க தோற்றங்களை வரைந்திருக்கிறார்: ரங்கூன் துறைமுகம் மற்றும் ஷ்வெடாகான் பகோடா. இரண்டும் ஒரே கருப்பொருளைச் சார்ந்தவையாக முந்தைய ஓவியங்களில் காட்டப்பட்டிருந்தாலும், அவை தனித்தனியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அடுத்தடுத்து வைக்கப்பட்டாற்போல் படமாக்கியிருக்கும் பாங்கு, பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான தெளிவான வேறுபாட்டை எடுத்துக் காட்டுகிறது. 1930-களில் ரங்கூனில், பழமையும் புதுமையும் இயல்பாக கலந்திருந்ததன் தாக்கத்தை இந்த ஓவியம் தெளிவாக விளக்குகிறது.
இந்த வெளிப்படையான முரண்பாடுகள், துறைமுகத்தில் காணப்படும் வெவ்வேறு படகுகளிலும் காணப்படுகிறது. ஓவியத்தில் இடப்புறத்திலிருக்கும் நீராவிக் கப்பல், பர்மாவில் ஐரோப்பியத் தொழில்துறையின் வளர்ச்சியையும், முன்னாலிருக்கும் மீன் பிடிப் படகுகள், காலனியாதிக்கத்திற்கு முந்தைய காலங்களைக் குறிப்பதாகவும் இருக்கின்றன.
யூ பா நயானின் இந்தப் படைப்பில், பல்வேறு ஓவிய உத்திகளை, தனித்தன்மையுடன் தொகுத்திருப்பது, குறிப்பிடத்தக்கதாகும். இந்தச் சுற்றுச்சூழலைச் சித்தரிக்கும் ஓவியத்தில், நீர்வண்ண வரைபட உத்திகளுடன் (இங்கிலாந்தில் இதை விரிவாக பயின்றிருக்கிறார்) எண்ணெய் வண்ண வரைப்படத்திற்குரிய கனமான தடித்த தூரிகை வண்ணங்களையும் கலந்து வரைந்திருக்கிறார்.