இரண்டு போர்வீரர்கள் ஒரு மலைமுகட்டின் மேல் நின்று தொடுவானத்தை நோக்கியிருக்கும் காட்சி, ‘போரும் அமைதியும்’ என்ற படைப்பில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இரு வீரர்களும் ஓய்வாக இருந்தாலும், தயார் நிலையில் இருக்கும் தோரணை தெரிகிறது. ஒரு வீரர் துப்பாக்கியைக் கையில் ஏந்தியிருக்கிறார். மற்றொருவர் தமது தோழரின் தோளை எதிர்பார்ப்புடன் பற்றியிருக்கிறார்.
இந்தோனேசியாவில் 1945 முதல் 1949 வரை டச்சு ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப் போர் நடந்த சமயத்தில், ஹென்ரா குணவான் மற்ற கலைஞர்களுடன் “முன்னணி ஓவியர்கள்” என்ற பொருள்கொண்ட பிலுகிஸ் பிரன்ட் என்ற குழுவை அமைத்தார். இந்தக் குழுவினர் போர்வீரர்களுடன் இணைந்து கடுமையாகப் போரிட்டனர். ஹென்ரா போர்க்களத்திலிருந்து பல நிகழ்வு வரைபடக் குறிப்புகளைக் கொண்டு வந்தார். பின்னாட்களில், அவருடைய பெரிய ஓவியப் படைப்புகளுக்கு அவை சான்றாதாரமாக இருந்தன.
இந்த ஓவியம் போர் முடிந்தவுடன் வரையப்பட்டதால், ஹென்ராவின் போர் பற்றிய கண்ணோட்டங்கள் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மலையுச்சிகளின் கடுமையை ஓவியத்தில் தீவிரமாக உணர்த்தியிருக்கிறார். ஜாவானியப் பாரம்பரியத்திலும், நாட்டுப்புறவியலிலும், மலைகள் வீரத்திற்கும் உத்வேகத்திற்கும் அடையாளமாக இருந்திருக்கின்றன. இத்தகைய நம்பிக்கையூட்டும் செய்தியையே, அநேகமாக, அவர் வெளிப்படுத்த விரும்பியிருக்கலாம்.